திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சிவகாசி திருத்தங்கல் பக்தர்கள் காவடி மற்றும் துாக்க நேர்ச்சை பறவை காவடி எடுத்து வந்தனர். திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சிவகாசி அருகில் உள்ள திருத்தங்கல் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கடந்த 20 வருடங்களாக குருசாமி ராதாகிருஷ்ணன் தலைமையில் பாதயாத்திரையாக வருவது வழக்கம். அதேபோல் இவ்வருடம் அவரது தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர். அதில் மாரியப்பன் என்ற பக்தர் துாக்க நேர்ச்சை பறவை காவடி எடுத்தும், மேலும் சில பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து நேர்ச்சை செலுத்தினர். பறவை காவடி எடுத்த பக்தரிடம் தொட்டிலில் குழந்தையை கொடுத்து பக்தர்கள் துாக்க நேர்ச்சை செலுத்தி பக்தி பரவசமடைந்தனர்.