தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்தனர்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03நவ 2026 11:11
தென்காசி: காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற பழமையான திருத்தலங்களில் ஒன்றான தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவிலில், ஆண்டுதோறும் மாசி மகப் பெருந்திருவிழா மற்றும் ஐப்பசி மாத திருக்கல்யாணத் திருவிழா ஆகியவை பத்து நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஐப்பசி மாத திருக்கல்யாணத் திருவிழா கடந்த அக்டோபர் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று விழாவில் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உலகம்மன் வீற்றிருக்க கீழறத விதி தெற்கு ரத வீதி மேலரது வீதி வடக்கு ரத விதிகளில் தேர் வ லம் வந்தது. தேரோட்டத்தை கோவில் அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன் செயல் அலுவலர் பொன்னி ஆகியோர் துவக்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதனைத் தொடர்ந்து, நவம்பர் 5ம் தேதி வியாழக்கிழமை காலை 8 மணிக்கு மேல், தீர்த்தவாரி மண்டபத்தில் அம்மன் தவசு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று மாலை அருள்மிகு உலகம்மன், காசி விஸ்வநாதரிடம் தவசுக் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, உத்திர நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுபவேளையில், இரவு 9 மணி முதல் 10 மணிக்குள் மிதுன லக்னத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கட்டளைதாரர்கள் இணைந்து செய்து வருகின்றனர். ஐப்பசி மாத திருக்கல்யாணத் திருவிழா தொடங்கியுள்ளதால், தென்காசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திருக்கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.