பதிவு செய்த நாள்
12
ஜன
2022
03:01
திருவொற்றியூர்: திருவொற்றியூர், காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், கூடார வெள்ளி நிகழ்வு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.மார்கழி மாதத்தில் விஷ்ணு கோவில்களில், மார்கழி மாதத்தின் 27ம் நாள் கூடார வெள்ளி நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.மார்கழியில், ஸ்ரீரங்கம் கோவிலில் உறையும் இறைவனையே மணந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், 27 நாட்கள் விரதமிருந்த ஆண்டாள்,
தன் நோன்பை நிறைவு செய்யக் கூடிய கூடார வெள்ளி நிகழ்வு நேற்று நடந்தது.கூடாரை வெல்லும் சீர்க்கோவிந்தா என்ற திருப்பாவை பாடலைப் பாடி, ஆண்டாள் விரதத்தை நிறைவு செய்ததாகக் கூறப்படுகிறது.இதை முன்னிட்டு திருவொற்றியூர், காலடிப்பேட்டையில் உள்ள கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், உற்சவர் ஸ்ரீ பவளவண்ண பெருமாள், நான்கடியில் மயில் இறகுகளாலான பிரமாண்ட மாலையணிந்து, பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.வண்ண வண்ண மலர்களால் கூடாரங்கள் அமைக்கப்பட்டு, திருப்பாவை பாடல் பாடி, கூடாரவல்லி நிகழ்வை பக்தர்கள் வெகுவிமரிசையாக கொண்டாடினர். நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும், நேற்று நிகழ்வின் விசேஷமான அக்காரவடிசல் பிரசாதத்துடன், ஐந்து வகை பிரசாதம் வழங்கப்பட்டது.