பதிவு செய்த நாள்
12
ஜன
2022
03:01
பெரம்பலுார்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுப்பானை வைத்து பொங்கல் இடுவதற்காக அரியலுார் மாவட்டத்தில் அதிக அளவில் மண்பானைகள் தயாராகி வருகின்றன. அரியலுார் மாவட்டம், சோழமாதேவி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். ஏரியில் இருந்து எடுக்கப்படும் செம்மண், களிமண், மணல் ஆகியவற்றை வடிகட்டி சேறு போல் குழைத்து சக்கரத்தில் வைத்து மண்பானை தயாரிக்கப்படுகிறது. பின்னர், உலரவைத்து நெளிவுகள் மரக்கட்டையால் மெதுவாக தட்டி சரி செய்யப்படுகிறது. அதற்குப் பிறகு சூளையில் இட்டு வேகவைத்து விற்பனைக்கு தயாராகிறது. அரை கிலோ கொள்ளளவு கொண்ட மண்பானை ரூ.70க்கும், ஒரு கிலோ ரூ 100க்கும், 2 கிலோ ரூ 150 க்கும் விற்கப்படுகிறது சிறிய மண் எடுப்பு 200க்கும் பெரியது 150 க்கு விற்கப்படுகிறது. மேலும், இங்கு தயாரிக்கப்படும் பானைகள் அரியலுார், பெரம்பலுார், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, கடலுார், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதனால், பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் வேளையில் பிற மாவட்டங்களுக்கு மண்பானையை விற்பனை செய்வதற்காக தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து, மண்பாண்ட தொழிலாளி முத்தையன் கூறியதாவது: கடந்த மூன்று தலைமுறையாக இத்தொழில் செய்து வருகிறோம். பொங்கல் பண்டிகை காலங்களில் மட்டுமே மண்பானை செய்யும் தொழிலில் வருமானம் உள்ளது. பித்தளை, சில்வர் பாத்திரங்கள் வந்தாலும் தற்போது பாரம்பரிய முறையில் மண் பானையில் பொங்கல் வைப்பதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. மண்பானை தயாரிக்க ஏரியில் மண்ணெடுத்து வருவது முதல் அதனை சூளையில் வேகவைத்து விற்பனைக்கு அனுப்புவது வரை ஒரு மாதம் வரை ஆகிறது. பொங்களுக்கு ஒரு மாதத்துக்கு முன் பணிகள் தொடங்கப்படும் நிலையில் கடந்த மாதம் பெய்த தொடர் மழை காரணமாக உற்பத்தி பாதித்தது. பச்சை பானைகள் தயாரித்து வைக்கப்பட்ட நிலையில், தற்போது சூளையில் வேகவைத்து விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நாங்கள் தயாரிக்கும் மண் பானைகள் பொங்கல் பண்டிகை நாட்களில் விற்பனை செய்ய அரியலுார், பெரம்பலுார், தஞ்சாவூர் மாவட்டங்களில் எங்களிடம் வாங்கிச் செல்கின்றனர். எங்களிடம் குறைந்த விலைக்கு மண்பானைகளை வாங்கிச் வெளிச்சந்தையில் அரை கிலோ ஒரு மண் பானையின் விலை ரூ 100 வரைக்கும் விற்பனை செய்கின்றனர். மண் அடுப்பு, மண்பானைகளை பொது மக்கள் வாங்கிச் செல்வதில் ஆர்வம் இல்லை. வெளிமாவட்ட வியாபாரிகள் நம்பியே இத்தொழில் செய்ய வேண்டி உள்ளது. பொங்கலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் மண்பானைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த ஆண்டு விற்பனை அதிகரிக்கும் என நம்புகிறோம் என்றார்.