பதிவு செய்த நாள்
13
ஜன
2022
01:01
சபரிமலை : சபரிமலையில், மகர ஜோதி தரிசனத்திற்கு புல்மேட்டில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் இங்குள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. இதற்காக, புல்மேடு பாதை திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை அது திறக்கப்படவில்லை. தற்போது உள்ள ஜோதி தரிசன இடங்களும், பாதைகளும் போதுமானதாக இருப்பதால், இந்த ஆண்டு புல்மேடு பகுதியில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என, சபரிமலை சன்னிதானத்தில் நடைபெற்ற உயர் அதிகாரிகளின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
புல்மேட்டில் ஜோதி தரிசனம் முடித்துவிட்டு ஊர் திரும்புவது, தமிழக பக்தர்களுக்கு வசதியாக இருக்கும். தற்போது, அங்கு அனுமதி மறுக்கபட்டுள்ளதால், அது அவர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலையில் கூடும் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த, போலீசார் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். தரிசனத்திற்கு பின், பக்தர்கள் பாதுகாப்பாக பம்பை செல்லும் பாதைகள் தயார் செய்யப்பட்டு வருவதாக, சன்னிதானம் போலீஸ் தனி அதிகாரி கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.
பெரிய கட்டடங்களின் மொட்டை மாடிகளில் நின்று தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மொட்டை மாடிகளுக்கு செல்லும் கதவுகளை பூட்டி அதன் சாவிகளை ஒப்படைக்கும்படி, தேவசம் போர்டு அதிகாரிகளுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மகரஜோதி நாளன்று மழை பெய்தால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அதை சமாளிப்பது குறித்து போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.புறப்பட்டது திருவாபரணம்!ஆண்டுதோறும், மகரஜோதி நாளன்று அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டிகள், பந்தளம் அரண்மனையில் இருந்து சபரிமலை சன்னிதானத்திற்கு எடுத்து வரப்படுகின்றன.
பின், மகரஜோதி தரிசனத்தின்போது, அய்யப்பனுக்கு அந்த ஆபரணங்கள் அணிவிக்கப்படுவது வழக்கம். இதற்காக, பந்தள அரண்மனையில் இருந்து நேற்று திருவாபரணப் பெட்டிகள் புறப்பட்டன. நாளை மாலை 6:30 மணிக்கு இந்த பெட்டிகள் சபரிமலை சன்னிதானத்திற்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பம்பையில் விளக்குமகரஜோதி நிகழ்வின் ஒரு பகுதியாக, பம்பையில் இன்று பம்பை விளக்கு வழிபாடும், விருந்தும் நடைபெற உள்ளது. எருமேலியில் பேட்டை துள்ளி, பெருவழி பாதை வழியாக, நேற்று இரவு பம்பை வந்து சேர்ந்த அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்கள், இந்த வழிபாட்டை நடத்துவர். பிற்பகலில், பல்வகை கூட்டு வகைகள் மற்றும் பாயாசத்துடன் உணவு சமைத்து, பக்தர்கள் வட்டமாக அமர்ந்து, சரண கோஷமிட்டு அந்த உணவை உண்பர். பின், மாலையில் மூங்கில்களால் தேர் போல் வடிவமைத்து, அதில் விளக்குகள் ஏற்றி, பம்பை ஆற்றில் மிதக்கவிட்டு சரண கோஷமிடுவர்.