ஊட்டி: நீலகிரியில், வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
ஊட்டி, பழைய அக்ரஹாரத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் காலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது. தொடர்ந்து, 6:30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள கோவிந்தா கோஷம் எழுப்பியப்படி சாமி தரிசனம் செய்தனர். அதே போல், ஊட்டி புது அக்ரஹாரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கீழ் இயங்கும் வேணுகோபால சுவாமி கோவிலில் அதிகாலை, 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் வேணுகோபாலசுவாமி சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார். சொர்க்க வாசல் திறக்கப்பட்டு கோவில் வளாகத்தில் வைக்கப்பட்ட சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாவட்டத்தில் பிற பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நடந்த சிறப்பு அலங்கார பூஜையில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் கோவில்களில் சொர்க்க வாசல் திறந்தவுடன் சிறிது தூரம் மட்டும் சுவாமி வீதி உலா நடந்தது. ஊட்டியில் அதிகாலையில் கடும் குளிரை பொருட்படுத்தாமல் பக்தர்கள் கோவிலுக்கு வந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முக கவசம் அணிந்து பங்கேற்றனர்.