சபரிமலை : சபரிமலையில் இன்று (ஜன.,14) மகர ஜோதி தரிசனம் நடக்கிறது. மகர சங்கராந்தி பூஜை இன்று மதியம் நடக்கிறது.
கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடக்கின்றன. பந்தளத்திலிருந்து புறப்பட்ட திருவாபரண பவனி இன்று மாலை சரங்குத்தி வந்தடையும். இங்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகளின் வரவேற்புக்கு பின் சன்னிதானத்துக்கு எடுத்து வரப்படும். மாலை 6:25க்கு 18ம் படி வழியாக சன்னதிக்கு வந்ததும் தந்திரியும், மேல்சாந்தியும் திருவாபரணத்தை பெற்றுக்கொள்வர். பின் நடை அடைத்து விக்ரகத்தில் ஆபரணங்கள் அணிவிப்பர். தொடர்ந்து நடைதிறந்து தீபாராதனை நடக்கும். தீபாராதனை முடிந்து சில வினாடிகளில் பொன்னம்பலமேட்டில் மகர நட்சத்திரம் காட்சி தரும். தொடர்ந்து மகர ஜோதி மூன்று முறை காட்சி தரும்.
மகரஜோதி நாளில் நடக்கும் முக்கிய பூஜைகளில் ஒன்று மகர சங்கராந்தி பூஜை. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்லும் நேரத்தில் அய்யப்பனுக்கு இந்த பூஜை நடத்தப்படுகிறது. இன்று மதியம் 2:29 மணிக்கு இந்த பூஜை நடக்கிறது. இந்த நேரத்தில் திருவிதாங்கூர் மன்னர்களின் அரண்மனையான கவடியாரில் இருந்து கொடுத்து விடப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு பாத்திரத்தில் ஊற்றாமல், நேரடியாக விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்படும்.
ஹரிவராசனம் விருது: திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்தகோபன் கூறியதாவது:இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது கேரளாவைச் சேர்ந்த ரங்கநாதனுக்கு வழங்கப்படும். புல்மேடு பாதையை திறக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த மூன்று நாட்களில் பக்தர்களின் வருகை குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.