பதிவு செய்த நாள்
10
ஜூலை
2012
10:07
திருநெல்வேலி: பாளை.யில் இன்று (10ம் தேதி) நெல்லை இஸ்கான் சார்பில் பன்னாட்டு குருகுல மாணவர்களின் கிருஷ்ண பக்தி பஜனை நிகழ்ச்சி நடக்கிறது. இஸ்கான் நிறுவனர் தைதன்ய மகா பிரபு பிறந்த மேற்கு வங்கம் மாயாப்பூரில் உள்ள குருகுலத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்கள் இந்தியா முழுவதிலும் உள்ள இஸ்கான் மையத்திற்கு சென்று பக்தி பஜனைகளை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் பக்தி பஜனைகளை நடத்தினர். இன்று (10ம் தேதி) பாளை.யில் பக்தி பஜனைகளை நடத்துகின்றனர். பாளை. சவுராஷ்ட்ரா கோயில் முன்பிருந்து இன்று (10ம் தேதி) மாலை 6 மணிக்கு கிருஷ்ண பக்தி பஜனை, சுவாமி புறப்பாடு, பல்லக்கு உற்சவம் நிகழ்ச்சி துவங்குகிறது. அங்கிருந்து சிவன் கோயில் வடக்கு ரதவீதி, கீழரத வீதி, தெற்கு மாட வீதி, ஆயிரத்தன் கோயில் தெரு, தெற்கு பஜார், உச்சினிமாகாளி அம்மன் கோயில் தெரு, ராமசாமி சன்னதி தெரு, தெற்கு முத்தராமன் கோயில் தெரு, சடகோபன் சந்து, பெருமாள் மேலமாட வீதி, பெருமாள் வடக்கு மாட வீதி வழியாக கோபால சுவாமி கோயிலை வந்தடைகிறது. அங்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. நெல்லை டவுன்: வரும் 12ம் தேதி நெல்லை டவுன் சொர்ண மகாலில் பக்தி பஜனை மற்றும் பகவத் கீதை சொற்பொழிவு நடக்கிறது. 12ம் தேதி மாலை 6 மணிக்கு நெல்லை டவுன் கரியமாணிக்க பெருமாள் கோயில் சன்னதி தெருவில் ஆரம்பிக்கும் பன்னாட்டு குருகுல மாணவர்களின் கிருஷ்ண பக்தி பஜனை, அங்கிருந்து மேலரத வீதி, வடக்கு மாட வீதி வழியாக சொர்ண மகாலை அடைகிறது. அங்கு மாலை 6.30 மணிக்கு பகவத் கீதை சொற்பொழிவு நடக்கிறது. ஏற்பாடுகளை நெல்லை இஸ்கான் கிருஷ்ண பலராம் கோயில் மற்றும் யோகா மையத்தினர் செய்துள்ளனர்.