பதிவு செய்த நாள்
18
ஜன
2022
04:01
மதுரை: இன்று(18 ம்தேதி) திருப்பரங்குன்றம், திருத்தணி, வடபழனி, மருதமலை உள்ளிட்ட முருகன் கோவில்களில், தைப்பூச திருவிழா, கோலாகலமாக நடந்தது.
மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக நடந்தது. முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், கடந்த, 12ம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா துவங்கியது. தைப்பூசத்தை ஒட்டி அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 16 வகையான மங்கல திரவியங்கள் கொண்டு மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, ரத்தின அலங்காரத்தில் காட்சியளித்தார். திருத்தணி முருகன் கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு, மூலவருக்கு, சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடந்தன. சென்னை வடபழனி, முருகன் கோவிலில், காலை முருகப்பெருமானுக்கு, பால், பழம், பன்னீர், இளநீர் அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து, தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை கறுப்பு மலையடிவாரத்தில், காலை வள்ளலார் சத்திய ஞான சபை திறப்பு விழா நடந்தது.
பழநி முருகன் கோயில் தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர் திங்கள் செவ்வாய் ஆகிய நாட்களில் கோயில் மூடப்பட்டிருந்த போதிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் அடிவார பகுதியில் காவடியாட்டம் மயிலாட்டம் கரகாட்டம் அலகு குத்தி சென்றனர். ஊட்டி எல்க்ஹில் முருகன் கோயில், அரசு உத்தரவு படி கொரோனா பரவல் காரணமாக முடப்பட்டுள்ளதால் , பக்தர்கள் வெளியே உள்ள முருகன் சிலையை வணங்கி சென்றனர். மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை பவானி ஆற்றின் கரையோரத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பாலாபிஷேகம் நடந்தது. தைப்பூசத் திருவிழாவில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. கோவிலில் நுழைவாயிலில் சாமி தரிசனம் செய்து பக்தர்கள் திரும்பினர்.