பதிவு செய்த நாள்
18
ஜன
2022
04:01
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக நடந்தது. முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், கடந்த, 12ம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா துவங்கியது. பத்து நாள் தைப்பூச திருவிழாவின், முதல் 6 நாட்கள், காலையும், மாலையும் யாகசாலை பூஜைகளும், சுவாமி திருவீதி உலாவும் நடந்தது. கொரோனா தொற்று காரணமாக, கடந்த, 14 முதல் 18ம் தேதி வரை, கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு தடை விதித்திருந்தது. இதன் காரணமாக, தைப்பூச திருவிழாவான இன்று மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தைப்பூச தேரோட்டம் இந்தாண்டும் ரத்து செய்யப்பட்டது.
தைப்பூசத்தை ஒட்டி அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 16 வகையான மங்கல திரவியங்கள் கொண்டு மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, ரத்தின அலங்காரத்தில் காட்சியளித்தார். அதைத்தொடர்ந்து, காலை, 8:00 முதல் 9:00 மணி வரை தைப்பூச திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விநாயகர் பூஜை, கங்கணம் கட்டுதல், கலச பூஜை, பட்டு வஸ்திரம் சாத்துதல், தாரை வார்த்து கொடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. காலை, 8:46 மணிக்கு, வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதனை தொடர்ந்து, 9:30 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராய், யானை வாகனத்தில் எழுந்தருளி, திருவீதியுலா வந்தார். கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், தைப்பூச திருக்கல்யாண உற்சவத்தில், அர்ச்சகர்கள், திருக்கோவில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.