தேவ சிற்பியான விஸ்வகர்மா திருமாலுக்கு பல கோயில்களை அமைத்தார். இதே போல தன்னால் கோயில்கள் கட்ட முடியவில்லையே என அசுரகுல சிற்பியான மயன் வருந்தி பிரம்மாவிடம் முறையிட்டார். பூலோகம் சென்று தவம் செய்யும்படி பிரம்மா வழிகாட்டினார். மயனின் தவத்தில் மகிழ்ந்த திருமால் சங்கு சக்கரதாரியாக காட்சியளித்தார். அப்போது தசரத குமாரனாக ராமாவதார கோலத்தில் காட்சிதரும்படி மயன் வேண்டினார். தன் கையிலிருந்த சங்கு, சக்கரத்தை அருகில் நின்ற கருடனிடம் கொடுத்து விட்டு வில், அம்புடன் ராமனாக மாறி நின்றார். 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே கருடன் சங்கு சக்கரம் ஏந்தி நான்கு கைகளுடன் இருக்கிறார். இவருக்கு துளசிமாலை அணிவித்து தீபமேற்றினால் கிரகதோஷம், விஷபயம் நீங்கும். கும்பகோணம் அருகிலுள்ள வெள்ளியங்குடி பெருமாள் கோயிலில் சங்கு, சக்கரம் ஏந்தியிருக்கும் இந்த சதுர்புஜ கருடாழ்வாரை தரிசிக்கலாம்.