ஒருமுறை சிவபெருமானின் தரிசனம் வேண்டி மகாலட்சுமி தவம் செய்தாள். ஆனால் அவளுக்குக் காட்சி கிடைக்கவில்லை. எனவே தன்னை வில்வ மரமாக மாற்றிக் கொண்டு வில்வ இலைகளை மழையாகப் பொழிந்து சிவனை பூஜித்தாள். அதன் பின் சிவன் மனமிரங்கி காட்சி தந்தார். வில்வ மரமாகத் தோன்றி அர்ச்சனை செய்ததால் ஐஸ்வர்ய மகுடத்தை மகாலட்சுமிக்கு அளித்து செல்வத்துக்கு அதிபதி ஆக்கினார். மனிதர்கள் அவரவர் பாவ புண்ணியத்திற்கேற்ப செல்வத்தை வழங்கவும் உத்தரவிட்டார். திருச்சி மாவட்டம் வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோயிலில் இவளே ‘ஐஸ்வர்ய மகாலட்சுமி’ என்னும் பெயரில் அருள்புரிகிறாள். அபய, வரத கைகளோடு, மேலிரு கரங்களில் தாமரை மலருடன் காட்சி தரும் இவளுக்கு அபிஷேகம் செய்யும் முன் இங்குள்ள வில்வ மரத்துக்கு பூஜை நடக்கிறது.