கருப்பு நிறத்தில் மாறிய கடற்கரை : திருச்செந்துாரில் பக்தர்கள் அதிர்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜன 2026 10:01
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் முன்புள்ள கடற்கரையில் மண் திடீரென கருப்பு நிறத்தில் மாறியதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடலில் புனித நீராடிய பின்னர் சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், கோவில் முன்புள்ள கடற்கரையில் நேற்று காலை சில பகுதிகள் மட்டும் கருப்பு நிறத்தில் மாறியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடலின் நிறமும் காலை நேரத்தில் கருப்பு நிறத்தில் காட்சியளித்தது. சில மணி நேரத்திற்கு பின் கடல் உள்வாங்கி காணப்பட்டது.
பக்தர்கள் கூறியதாவது: திருச்செந்துார் அருகே உடன்குடியில் புதிதாக அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டு தற்போது சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. அதற்கான நிலக்கரி இறங்குதளம் கல்லாமொழி அருகே கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ளது. அனல் மின்நிலைய சோதனை ஓட்டத்தின் காரணமாக நிலக்கரி துகள்கள் கடலுக்குள் விடப்பட்டு, அதனால் கடலில் இருந்து மணல்கள் கருப்பு நிறத்தில் மாறி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. கடற்கரையில் தேங்கியுள்ள கருப்பு நிற மண்ணை உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வரும் காலத்தில் கடலுக்குள் நிலக்கரி கழிவுகள் கொட்டப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.