பதிவு செய்த நாள்
29
ஜன
2022
07:01
சேலம்: ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில், வாரந்தோறும் கோவையிலிருந்து திருப்பதிக்கு, சிறப்பு தரிசனத்துடன் சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக்கழகம், கோவை மண்டல மேலாளர் ரதேஷ் சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி., ரயில் மற்றும் விமானம் மூலம் பல பயணத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாக வீடுகளில் அடைந்து கிடந்த மக்கள் தளர்வு நடவடிக்கையால், அன்றாட வாழ்க்கையை தொடங்கியுள்ளனர்.
திருப்பதி செல்லும் பக்தர்களின் வசதிக்காக, கோவை–திருப்பதி இடையிலான புதிய ரயில் சேவையை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது. இதன்படி, வாரந்தோறும் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக சென்று, திருப்பதியில் சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடத்தப்படும் இந்த சுற்றுலாவுக்கு கட்டணமாக, ஏ.ஸி., இருக்கையில் ஒருவருக்கு, 4600 ரூபாய், சாதாரண இருக்கை, 3,300 ரூபாய் முதல் தொடங்குகிறது. இதில், ரயில் பயணக்கட்டணம், திருப்பதி சிறப்பு தரிசன கட்டணம், காலை மற்றும் இரவு சைவ உணவு கட்டணம், சுற்றுலா வழிகாட்டி, தங்கும் வசதி, ஏ.ஸி., பஸ் கட்டணம் ஆகியவை அடங்கும். விபரங்கள் மற்றும் முன்பதிவுக்கு, கோவை, அரசு மருத்துவமனை எதிரில், மாருதி டவர் பகுதியில் அமைந்துள்ள ஐ.ஆர்.சி.டி.சி., பகுதி அலுவலகத்தை 82879 31965, 90031 40655 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகம் மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட ரயில் முன்பதிவு பொது சேவை மையங்களிலும் முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.