சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு; பக்தர்கள் சாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2022 07:01
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் தளர்த்தப்பட்டதால், தை மாத பிரதோஷ வழிபாட்டிற்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், நேற்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் குவிந்திருந்தனர். காலை 6:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு, உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் பக்தர்கள் மலை ஏற வனத்துறையினர் அனுமதித்தனர். பகல் 12:00 மணிவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து திரும்பினர். கோயிலுக்கு செல்லும் வழியிலுள்ள ஓடைகளில் நீர்வரத்து காணப்பட்டதால் பக்தர்கள் குளித்து மகிழ்ந்தனர். கோவிலில் நேற்று மாலை 4:30 மணிக்கு மேல் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பிரதோஷ வழிபாடு பூஜைகள் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிகளை பக்தர்கள் மனநிறைவுடன் தரிசித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும், நாளை தை அமாவாசை என்பதாலும் அதிகளவில் பக்தர்கள் வரலாம் என்பதால், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.