சேதுக்கரை: தை அமாவாசையை முன்னிட்டு சேதுக்கரை மன்னார் வளைகுடா கடலில் பக்தர்கள் புனித நீராடினர்.
சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில் முன்புறம் உள்ள கடற்கரையில் அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்கள் கடலில் புனித நீராடினர். அதிகாலை முதலே குவிந்த பக்தர்கள் சேதுக்கரை கடற்கரையோரத்தில் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை செய்தனர். பின்னர் சேதுபந்தனம் ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில் வழிபாடு செய்தும் அகத்தியர், பிள்ளையார் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் காலை முதல் பாலாபிஷேகம் நடந்தது. மாரியூர் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். சாயல்குடி அருகே மூக்கையூர் கடற்கரையில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் உள்ளிட்ட பூஜைகளை செய்தனர் திருப்புல்லாணி, கடலாடி போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.