பதிவு செய்த நாள்
31
ஜன
2022
04:01
மேட்டுப்பாளையம்: தை அமாவாசையை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் நந்தவனத்தில், ஏராளமானவர்கள், தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். மேட்டுப்பாளையம் எஸ்.எம்.நகரில், நகராட்சி அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவனம் உள்ளது. இங்கு தை அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, தை அமாவாசை நாளில், நந்தவனம் திறக்கப்பட்டதால், வழக்கத்திற்கு மாறாக மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.
காலை, 5:00 மணிக்கு நந்தவனம் திறக்கப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என, முன்கூட்டி அறிந்த நந்தவன நிர்வாகம், கூடுதலாக, 12 புரோகிதர்களை ஏற்பாடு செய்திருந்தது. நந்தவனத்தில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, நீண்ட வரிசையில் நிற்பதற்காக, தடுப்புகள் அமைத்திருந்தனர். பொதுமக்களை தன்னார்வலர்கள் சரியான முறையில் நிற்கும்படி கூறி வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை நந்தவன தலைவர் பொன்னுசாமி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.