வத்திராயிருப்பு : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்ட நிலையில் தை பிரதோஷ நாள் முதல் பக்தர்கள் சதுரகிரி மலை கோயிலுக்கு அனுமதிக்கப்பட்டனர். தை அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் மாலை முதலே வந்த வெளி மாவட்ட பக்தர்கள் தாணிப்பாறை மலையடிவாரத்தில் தங்கினர்.அமாவாசையையான நேற்று காலை 6:30 மணிக்கு வனத்துறை கேட் திறந்ததும் உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.
தடை பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் வனத்துறையினர் சோதனை செய்தனர்.கோயிலில் சந்தன மகாலிங்கம், சுந்தர மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளை கோயில் பூஜாரிகள் செய்தனர். பக்தர்கள் வரிசையில் நின்று தரிசித்தனர். விருதுநகர், மதுரை உட்பட பல்வேறு நகரங்களுக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று காலை 11:00 மணிவரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாதன், அறநிலையத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.