திருப்புவனம்: தை அமாவாசையை முன்னிட்டு இந்துக்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் நேற்று மதுரை, சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து வைகை ஆற்றங்கரையில் திதி, தர்ப்பணம் வழங்கி முன்னோர்களை வழிபட்டு சென்றனர். பக்தர்கள் ஏராளமானவர்கள் வந்ததால் நான்கு ரத வீதிகளிலும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்ட குளியல் தொட்டியில் போதிய தண்ணீர் இல்லாததால் பக்தர்கள் சிரமப்பட்டனர். வைகை ஆற்றில் கழிவு நீர் தேங்கியுள்ள நிலையில் அதனை தாண்டி செல்ல முடியாமலும் குடிநீர், கழிப்பறை வசதியில்லாததாலும் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். ஆனால் பக்தர்களிடம் திதி, தர்ப்பணம் வழங்க கறாராக கட்டணம் வசூலித்தனர்.