திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவிழா துவங்கும் வகைகள் ஜன. 31 மாலையில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அனுக்கை விநாயகர் முன்பு அனுக்ஞை, வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தது. இன்று காலை கொடிப் பட்டம் கோயில் திருவாட்சி மண்டபத்தில் வலம் சென்று கொடிக்கம்பத்தில் கட்டப்பட்டது. சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை சர்வ அலங்காரத்தில் கொடிக்கம்பம் முன்பு எழுந்தருளினர். சிவாச்சாரியார்களால் கொடியேற்றப்பட்டு கொடிக்கம்பத்தின் அடிப்பாகத்தில் அபிஷேகங்கள் நடந்தது. திருவிழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. திருவிழா நடைபெறும் நாட்களில் வழக்கமாக தினம் காலையில் சிம்மாசனம், தங்க சப்பரம், சப்பரம் ஆகியவை வாகனங்களிலும், இரவில் தங்கமயில், ஷேசம், ரிஷபம், ரத்தின சிம்மாசனம், விடையாத்தி சப்பரம், தங்க குதிரை, பச்சை குதிரை வாகனங்களில் சுப்ரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி வீதிஉலா நிகழ்ச்சியில் அருள்பாலிப்பர். இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலால் கோயிலுக்குள் சுவாமி புறப்பாடு நடக்கிறது.