வைகுண்டத்தை அடைந்த உயிர் பெறும் அனுபவங்கள் மிக புதுமையானவை. வைகுண்ட எல்லையில் ஓடும் புண்ணிய நதியான விரஜா நதியில் முதலில் நீராடி மகிழும். அதனால், அந்த ஜீவனின் கர்மவினைகள் எல்லாம் மறையும். இதன் பின் உயிர் ஒளியுடம்பை பெற்று ‘ஐரம்ம தீபம்’ என்னும் புண்ணிய குளத்தின் வழியாக சோமச வனத்திலுள்ள அரச மரத்தை அடையும். அங்கு வைகுண்ட வாசிகளான ஜீவன் முக்தர்கள் கூட்டமாக நின்று வரவேற்பர். அதன் பின் தேவமாதர்கள் அழகிய ஆடை, ஆபரணத்தால் அலங்காரம் செய்வர். இன்னிசை முழக்கத்துடன் தேவ விமானத்தில் ஏறும் உயிர், ‘திருமாமணி மண்டபம்’ என்னும் பெருமாள் துயிலும் இடத்தை அடையும். அங்கு சுவாமிக்கு நிரந்தரமாக தொண்டு செய்யும் பாக்கியம் பெறும்.