அசோக வனத்தில் இருந்த சீதையை கண்ட அனுமன், ‘கண்டேன் கற்பினுக்கு அணியை கண்களால்’ என்று ராமனுக்கு தெரிவித்தார். ராமனுக்கு இச்செய்தி காதில் தேனாக விழுந்தது. அனுமனுக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என நீண்ட நேரம் யோசித்தார் ராமர். என்ன கொடுத்தாலும் ஈடாகாது என்ற முடிவுக்கு வந்தவராக அவரைக் கட்டித் தழுவிக் கொண்டார். சீதை மட்டுமே ராமனின் தோள்களை தழுவும் பாக்கியம் பெற்றவள். அந்த அன்புத் தழுவலைப் பெற்ற அனுமன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. ‘பகவான் அடியார்களுக்கு என்ன கொடுக்கலாம் என்று எப்போதும் காத்திருக்கிறார்’ என திவ்யபிரபந்தத்தில் நம்மாழ்வார் குறிப்பிடுகிறார். தகுதியறிந்து பரிசளிக்கும் போது கொடுப்பவர், வாங்குவர் அடையும் சுக அனுபவத்திற்கு அளவில்லை.