திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே என்.வைரவன்பட்டி வடிவுடையம்மை உடனாய வளரொளிநாதர் வயிரவ சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பின் நடந்த கும்பாபிஷேகத்தை திரளாக பக்தர்கள் தரிசித்தனர்.
இக்கோயிலுக்கு நகரத்தாரால் கடந்த 1894 ல் திருப்பணிகள் நடந்து 6 முறை கும்பாபிஷேகங்கள் நடந்துள்ளது. கடந்த 2008க்குப் பிறகு 14 ஆண்டுகளுக்குப் பின் தற்போது திருப்பணிகள் நடந்து கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலைபூஜைகள் பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் தலைமையில் 80 சிவாச்சார்யர்களுடன் பிப்.1ல் துவங்கியது. யாகசாலையில் 39 குண்டங்களில் ஆறுகால யாகபூஜைகள் நடந்தன. காலை 7:15 மணி அளவில் யாகசாலையிலிருந்து புனித நீர் கலசங்களுடன் சிவாச்சார்யர்கள் புறப்பட்டனர். கோயிலின் ராஜ கோபுரம், சுவாமி, அம்பாள், வயிரவர் உள்ளிட்ட மூலவர் விமானங்களுக்கு சென்றனர். தொடர்ந்து வேத கோஷங்கள், திருமுறைகள் ஒலிக்க, மங்கள வாத்தியம் இசைக்க காலை 8.40 மணிக்கு 39கோபுர, விமான கலசங்களுக்கு புனித நீரால் கும்பாபிஷேகம் நடந்தது. திரளாக பக்தர்கள் கும்பாபிஷேகத்தை தரிசித்தனர். ஏற்பாட்டினை ஏழகப்பெருந் திருவான வயிரவன் கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தார் செய்தனர்.