பதிவு செய்த நாள்
06
பிப்
2022
03:02
இளையான்குடி: இளையான்குடி அருகே உள்ள மாடக்கோட்டை முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இளையான்குடி அருகே உள்ள மாடக்கோட்டை முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் எ.கே.,கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் தனசேகரன்,கருப்பதேவர் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் தலைமையில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. பணிகள் முடிவடைந்ததை அடுத்து கடந்த 4ந்தேதி கணபதி ஹோமத்துடன் முதலாம் கால யாகசாலை பூஜைகள் துவங்கின.இதனைத்தொடர்ந்து 3 கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்ததும் நேற்று காலை11:00 மணிக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் அடங்கிய கடங்களை ஊர்வலமாக கொண்டு சென்று ராஜகோபுர விமானங்களுக்கும் மற்ற பரிவார தெய்வங்களுக்கும் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.பின்னர் முனீஸ்வரர்,விநாயகர், சந்தனமாரியம்மன்,கருப்பண்ணசாமி, லாடசுவாமி,பஞ்சமுக காளியம்மன், பேச்சியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.கோயில் முன்பாக அன்னதானம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் வண்டல் ஊராட்சி தலைவர் முத்துக்குமார் மற்றும் ஜேசுதாஸ்,மாடகோட்டை, சாத்தமங்கலம்,வண்டல்,உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.