நம்மில் பலர், ‘என்ன வாழ்க்கை இது. தினமும் வேலைக்கு போகிறோம். மறுபடியும் வீட்டுக்கு வருகிறோம். மகிழ்ச்சியே இல்லை. என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை. எல்லோரும் சுயநலவாதிகளாக உள்ளனர்’ என புலம்புவர். இப்படிப்பட்டோர் வாழ்க்கையை ரசித்து வாழவில்லை என்பதே உண்மை. அக்கம்பக்கத்தை பாருங்கள். உங்களைச் சுற்றி அழகு கொட்டிக்கிடக்கிறது. அதிகாலையில் எழுந்து அருகில் உள்ள மரத்தில் இலைகளில் படர்ந்திருக்கும் இளம்பனியை கவனியுங்கள். இதமான காற்று, பறவையின் ஓசை என உங்களுக்குள் புத்துணர்ச்சி பாய்வது உங்களுக்கே தெரியும். பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்லும் பணியாளர்கள் என எத்தனை விதமான மனிதர்கள். மனிதர்கள் மட்டுமா... அவர்களுக்குள் எத்தனை விதமான குணநலன்கள். ஒவ்வொருவருக்குள் ஒரு நல்ல பண்பு மறைந்திருக்கும். இதை கவனித்தாலே போதும். உங்கள் மனதில் மகிழ்ச்சி தாண்டவமாட தொடங்கிவிடும்.