பதிவு செய்த நாள்
12
பிப்
2022
03:02
திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நேற்று மாசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குடவருவாயில் தீபாராதனையில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நாளை சுவாமி சண்முகப்பெருமான் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி பெருந்திருவிழா, கடந்த பிப். 7ம் தி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு, மேலக்கோயிலில் இரவு 7:30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியின் போது மேலக்கோயிலில் சுவாமி குமரவிடங்க பெருமானும், வானை அம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினர். அதே நேரத்தில் பந்தல் மண்டபம் முகப்பில், சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருள, எதிர் சேவையாக இருபுறமும் தீபாராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான ள் ‘அரோகரா’ கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமியும், அம்பாளும் திருவீதி உலா வந்து அருள்பாலித்தனர். மும்மூர்த்திகள் அம்சத்தில் சண்முகப்பெருமான் வீதியுலா: நாளை (13ம் தேதி) ஏழாம் திருவிழாவை முன்னிட்டு, அதிகாலை 4:30 மணிக்குமேல் 5:00 மணிக்குள் சுவாமி சண்முகரின் உருகு சேவை நிகழ்ச்சி நடக்கிறது. அதனைத் தொடர்ந்து 8 : 3 0 மணியளவில் சண்முகப்பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி, பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்து சேர்கிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 4:30 மணியளவில் சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி, சிவன் அம்சத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கர் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொ) குமரதுரை, உதவி ஆணையர் வெங்கடேசன் உள்ளிட்ட திருக்கோயில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.