பதிவு செய்த நாள்
15
பிப்
2022
11:02
மதுரை : தென்காசியில், 800 ஆண்டுகளுக்கு முந்தைய பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தாலுகா, நொச்சிக்குளம் கிராம விவசாய நிலத்தில் 800 ஆண்டு பழமையான பிற்கால பாண்டியர்கள் கால கல்வெட்டை, மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி பேராசிரியர்கள் கண்டுபிடித்தனர்.
இது குறித்து, கல்லுாரி உதவி பேராசிரியர்கள் ராஜகோபால், பிறையா குழுவினர் கூறியதாவது: எங்கள் கல்லுாரி தலைவர் ராஜகோபால், செயலர் விஜயராகவன் ஆலோசனைப்படி, தரையின் மேற்பரப்பில் பரவிய பழங்கால கல்வெட்டு ஆய்வில் ஈடுபட்டிருந்தோம். கல்லுாரி மாணவர் வீரமல்லைய்யா கொடுத்த தகவலின் அடிப்படையில், நொச்சிக்குளம் கிராமத்தில் ஆய்வு செய்தோம். அங்குள்ள விவசாய நிலத்தில் உருளை வடிவ கல் பாதி புதைந்தும், பாதி வெளியே நீண்டும் இருப்பதை கண்டோம். நிலத்தின் உரிமையாளர் அப்பையா அனுமதியுடன், மதுரை தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் உதவியுடன் அதை படி எடுத்தோம். இது 5 அடி உயரம், மேற்பகுதி அரை அடி அகலம், கீழ்பகுதி ஒரு அடி அகலம் கொண்டதாக உள்ளது. இந்த உருளை கல் செவ்வக கல் மீது அமைந்திருந்தது.
தமிழ் சய ஆண்டில், இரண்டாம் பாண்டியர் காலமான குலசேகர பாண்டியன் ஆட்சி காலத்தில் 1294 -- 1295களில் இது பொறிக்கப்பட்டது.கல்லக நாட்டு கீழ் பிடாகை காருலபயார் நல்லாண்டி கொடுத்த தான கல்வெட்டு என்ற வரிகள் உள்ளன. இது, 13ம் நுாற்றாண்டை சேர்ந்தது. மக்களும், மாணவர்களும் கல்வெட்டு குறித்த தகவல்களை, அரசுக்கு, ஆர்வமுள்ளவர்களுக்கு தெரிவித்தால், உண்மையான வரலாற்று நிகழ்வுகளை மறுவரையறை செய்ய உதவியாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.