உத்திரப்பிரதேசத்தில் உள்ள மதுரா கண்ணன் பிறந்த தலம். அங்கே கண்ணனுக்கான ஒரு பெரிய கோயில் உள்ளது. அங்குள்ள பலராமர் கோயில் பிரபலமானதுதான். இதை வட இந்தியர்கள் பலதேவ் தெளஜி மந்திர் என்கிறார்கள். இங்கு பலராமரின் உருவம் பெரிய கண்களைக் கொண்டதாக இருக்கிறது. கருப்பு வண்ணத்தில் காட்சியளிக்கிறது. வலது கை உயர்ந்து ஆசி வழங்குகிறது. இடது கையில் திரவம் அடங்கிய ஒரு கோப்பை காணப்படுகிறது. கண்கவரும் உடைகளும் நகைகளும் இந்த உருவத்துக்கு அணிவிக்கப்படுகின்றன. இரண்டு மீட்டர் உயரம் கொண்டதாக காட்சியளிக்கிறது இந்த சிலை. அருகில் பலராமரின் மனைவி ரேவதிக்கும் சிலை காணப்படுகிறது. டெல்லியைச் சேர்ந்த சேட் ஷ்யாம் தாஸ் என்பவர் இக்கோயிலை எழுப்பியிருக்கிறார். அதே மதுரா மாவட்டத்திலுள்ள ஸ்ரீ கிருஷ்ண பலராம் கோயில் புகழ் பெற்றது. இஸ்கான் அமைப்பினர் உருவாக்கப்பட்டுள்ள இக்கோயில் பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. இங்கு கிருஷ்ணர், பலராமரின் உருவங்கள் உள்ளன. அதன் வலது புறத்தில் ராதா கிருஷ்ணர் காட்சி தருகிறார். இடது புறத்தில் சைதன்ய மகாபிரபு, நித்தியானந்தர், பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதர் ஆகியோர் காட்சியளிக்கின்றனர். மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது இக்கோயில். இதன் அருகிலேயே சலவைக் கல்லால் எழுப்பப்பட்ட ஸ்வாமி பிரபுபாதரின் சமாதியும் காட்சியளிக்கிறது.