பதிவு செய்த நாள்
13
ஜூலை
2012
10:07
தூத்துக்குடி: தமிழகத்தில் உள்ள அனைத்து அறநிலையத்துறை கோயில்களிலும் முன்னுரிமை அடிப்படையில் சிறப்பு தரிசனம் செய்வதற்கு 7 லட்ச ரூபாய் கொடுத்து வைர அட்டை பெறுவதற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வசதிபடைத்தவர்கள் ஆர்வத்தோடு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் சுமார் 37 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இதில் பிரபலமான நூற்றுக்கணக்கான பெரிய கோயில்கள் அடங்கும். மாநிலம் முழுவதும் முக்கிய கோயில்களில் விழாக்காலம் தவிர மற்ற நாட்களில் மற்ற காலங்களில் முன்னுரிமை அடிப்படையில் தரிசனம் செய்ய வைரஅட்டை திட்டம் 2012-2013ம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையின் போது அறிவிப்பு வெளியிடப்பட்டன. முதல்வர் ஜெ., உத்தரவுப்படி அன்னதான திட்டத்திற்கு நன்கொடை அளிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் குறைந்தப்பட்சம் 7 லட்ச ரூபாய் நன்கொடை வழங்குவோர் தம் குடும்பத்தருடன் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் விழாக்காலங்கள் நீங்கலாக முன்னுரிமை அடிப்படையில் தரிசனம் செய்யும் வகையில் அவர்களுக்கு வைரஅட்டை வழங்கப்படும். இந்த அறிவிப்பு தற்போது அரசாணையாக வெளியிடப்பட்டு அனைத்து கோயில்களிலும் வைரஅட்டைக்கு வசதிபடைத்தவர்களை அணுகும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் அறநிலையத்துறை உதவி ஆணையர் வீரராஜன் தலைமையில் சிவன் கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் மற்றும் முக்கிய கோயில்களின் நிர்வாக அதிகாரிகள் வைர அட்டைக்கு வசதி படைத்தவர்களை அணுகும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து உதவி ஆணையர் வீரராஜன் கூறியதாவது; அன்னதான திட்டத்திற்கு நன்கொடை அளிப்பவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக முதல்வர் உத்தரவுப்படி அறநிலையத்துறையில் வைர அட்டை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வசதி படைத்தவர்கள் ஏழு லட்ச ரூபாய் செலுத்தி இந்த அட்டையை பெற முன்வரவேண்டும். இந்த அட்டை உள்ளவர்கள் தமிழகத்தில் எந்த கோயில்களிலும் விழாக்காலம் தவிர முன்னுரிமை அடிப்படையில் குடும்பத்தினருடன் சிறப்பு தரிசனம் செய்து கொள்ளலாம். சிறப்பு தரிசன முன்னுரிமை என்பது அந்தந்த திருக்கோயில்களின் முக்கிய ஆண்டு திருவிழாக்களுக்கு பொருந்தாது. வைர அடையாள அட்டை பெறும் திருக்கோயில் நன்கொடையாளர்கள் தமது குடும்பத்தினர் 7 நபர்களுக்கு மிகாமல் 20 ஆண்டுகளுக்கு சிறப்பு தரிசன முன்னுரிமை வசதி வழங்கப்படும். வைர சிறப்பு அனுமதி அடையாள அட்டை மாற்றத்தக்கதல்ல. பரம்பரை உரிமை கோரத்தக்கதும் அல்ல. வைர சிறப்பு அனுமதி அட்டை திருக்கோயில்களில் சிறப்பு தரிசனத்திற்கும், அர்ச்சனைக்கும் ஒரு நாளில் இரண்டு கால பூஜைக்கு மட்டும் செல்லத்தக்கது. வைரஅட்டை வைத்திருப்போர் விரும்பினால் அன்னதானம் வழங்கப்படும் திருக்கோயில்களில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு வீரராஜன் தெரிவித்தார். சிவன் கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் உடனிருந்தார். இந்த திட்டத்திற்கு அதிக நபர்களை சேர்க்கும் வகையில் அறநிலையத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். தங்கள் பகுதியில் உள்ள முதுநிலை மற்றும் முக்கிய திருக்கோயில்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நன்கு அறியும் வகையில் அதிகமான விளம்பரங்கள் செய்ய வேண்டும் என்றும், திட்டத்தின் நோக்கம் மக்களுக்கு சென்றடையும் வகையில் இதன் நடவடிக்கை இருக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. முதுநிலை திருக்கோயில்கள் மற்றும் முக்கிய திருக்கோயில்களின் முன்னாள் மற்றும் தற்போதைய அறங்காவலர் குழு தலைவர், அறங்காவலர்கள் மற்றும் திருக்கோயில்களில் பெருமளவில் உபயம் செய்யும் உபயதாரர்கள், முக்கிய பிரமுகர்கள், பெறும் தன்வந்தர்கள் தொழில் அதிபர்கள் ஆகியோரை நேரடியாக அறநிலையத்துறை அலுவலர்கள் நேரில் சந்தித்து திட்டத்தின் நோக்கம் குறித்து தெரிவித்து அவர்களை வைர அட்டை பெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதால் அறநிலையத்துறை கோயில்களின் நிர்வாக அதிகாரிகள் இதற்காக முக்கிய பிரமுகர்களை தொடர்ந்து அணுகி வருவதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு இணை ஆணையர் மண்டலத்திலும் குறைந்தப்பட்சம் 10 நன்கொடையாளர்களை இந்த திட்டத்தில் சேர்த்து திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஒவ்வொரு முதுநிலை திருக்கோயில்களிலும் குறைந்தப்பட்சம் 5 நன்கொடையாளர்களை இந்த திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் அறநிலையத்துறையினர் இதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.