பதிவு செய்த நாள்
13
ஜூலை
2012
10:07
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா வரும் 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், ஜூலை 23 ல் நடக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் விழாக்களில் மிக முக்கியமானது ஆடிப்பூர விழா, வரும் ஜூலை 15 ல், காலை 7.15 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கருடாழ்வார் முத்திரை பதித்த கொடி நான்கு மாட வீதிகள் வழியாக கொண்டு வர, கொடிமரத்தில் ஏற்றப்பட்டு, பூஜைகள் நடக்க உள்ளன. அன்று இரவு 11 மணிக்கு 16 வண்டி சப்பரத்தில் ஆண்டாள், ரங்கமன்னார் வீதியுலா நடக்கிறது. ஐந்தாம் நாள் காலை 9 மணிக்கு பெரியாழ்வார் மங்களாசாசனம் நடக்கிறது. இதைத் தொடர்ந்து, ஆடிப்பூர மண்டபத்தில் சுந்தரராஜ பெருமாள், பெரிய பெருமாள், திருவேங்கடமுடையான், திருத்தங்கல் அப்பன், ஆண்டாள், ரெங்கமன்னார் ஆகியோர் எழுந்தருளல் நடக்கிறது . இரவு 10 மணிக்கு நடக்கும் கருட சேவையை தொடர்ந்து, ஆண்டாள் மற்றும் சுவாமிகள் பல் வேறு வாகனத்தில் எழுந்தருள, வீதியுலா நடக்கிறது. ஏழாம் நாள் ஆண்டாள் மடியில், ரெங்கமன்னார் சயன திருக்கோலத்தில் காட்சி தரும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், ஜூலை 23 காலை 9.05க்கு நடக்கிறது. மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.