திருப்பரங்குன்றம் வைரத் தேருக்கு புதிய உள் சக்கரங்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25பிப் 2022 11:02
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பெரிய வைரத்தேரில் 3 டன் எடையில் புதிய உள் சக்கரங்கள் பொருத்தப்பட உள்ளன.
இத்தேர் 40 டன் எடை கொண்டது. பங்குனி திருவிழாவில் திருக்கல்யாணம் முடிந்து மறுநாள் சுவாமி, தெய்வானை தேரில் எழுந்தருளுவர். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இத்தேர் வலம்வரும். முன்பு அத்தேரின் அடிப்பகுதியில் வெளிப்புறத்தில் 4 மரச் சக்கரங்களும், உள்பகுதியில் 2 மரச் சக்கரங்களும் பொருத்தப்பட்டிருந்தன. அடிக்கடி பழுது ஏற்பட்டதால் தேர் வலம் வருவதில் காலதாமதம் ஏற்பட்டது. தென்பரங்குன்றம் வயல்களில் தேர் சக்கரங்கள் இறங்கி 2 நாட்களுக்கு பின்பு ஊர் கூடி இழுத்து நிலையில் நிறுத்தப்பட்டதும் உண்டு.இதனால் 1990ல் தேரின் வெளிப்பகுதியில் 6 டன் எடை கொண்ட 4 மெகா இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டன. தற்போது தேரின் உள்பகுதியில் பொருத்த 3 டன் எடை கொண்ட மைய அச்சுடன் சேர்ந்த 2 சக்கரங்கள் திருச்சி பெல் நிறுவனத்திலிருந்து வரவழைக்கப்பட்டது. மதிப்பு ரூ.3.50 லட்சம். இந்தாண்டு பங்குனி தேரோட்டம் மார்ச் 22ல் நடக்கிறது. புதிய சக்கரங்கள் பொருத்த 2 மாதமாகும். அதனால் தேரோட்டம் முடிந்தபின் பணி நடக்க உள்ளது.