பதிவு செய்த நாள்
25
பிப்
2022
03:02
உடுமலை: சின்னவீரம்பட்டி உஜ்ஜையினி மாகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, அம்மன் திருவீதி உலா நேற்று நடந்தது.உடுமலை சின்னவீரம்பட்டியில், பிரசித்தி பெற்ற, உஜ்ஜையினி மாகாளியம்மன் கோவில் உள்ளது.
கோவில், திருவிழா, 22ல், துவங்கியது. கொடுமுடி மற்றும் திருமூர்த்திமலையில், இருந்து, கிராம மக்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர்.மங்கள இசையோடு தீர்த்தங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, வழிகாத்த விநாயகர், குளத்து விநாயகர், தன்னாசி அப்பன், துர்க்கை அம்மன், பெரிய விநாயகர், மாகாளி அம்மனுக்கு தீர்த்த அபிேஷகம் நடந்தது. அன்று இரவு, பெரிய விநாயகர் கோவில் அருகே, மகாசக்தி கும்பம் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, 23ல், அம்மன் திருக்கல்யாணம், அலங்கார சிறப்பு தரிசனத்துக்கு பிறகு, மாவிளக்கு ஊர்வலம், பூவோடு எடுத்து பக்தர்கள் வழிபட்டனர். அன்று இரவு, வள்ளி கும்மி உள்ளிட்ட பாரம்பரிய கலைகள் நடத்தப்பட்டது.நேற்று, காலை 10:00 மணிக்கு, மாகாளி அம்மன் சப்பரம் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த அம்மனை, வீடுகள் முன் நின்று, பக்தர்கள் வரவேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்கள் மஞ்சள் நீராடும் நிகழ்ச்சி நடந்தது. கோவிலில், அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவையொட்டி, இன்று, பகல் 12:00 மணிக்கு, பஞ்சாமிர்த அபிேஷகம், சிறப்பு அலங்கார பூஜை நடைபெற உள்ளது.