கும்பாபிஷேகத்திற்காக காத்திருக்கும் பழமை வாய்ந்த சிவன் கோயில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25பிப் 2022 03:02
சிக்கல்: சிக்கல் அருகே மேலக்கிடாரத்தில் 800 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான சிவன் கோயில் உள்ளது. இங்குள்ள மூலவர் திருவனந்தீஸ்வரமுடையார் சமேத சிவகாமி அம்மன் கோயிலில் சிவராத்திரி அன்று வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே சூரிய ஒளி நேரடியாக மூலவரின் சன்னதியில் விழும் அபூர்வ நிகழ்வு நிகழ்கிறது.
கோயில் முழுவதும் கடற்பாறை மற்றும் கருங்கல்பாறை கட்டுமானத்தால் உள்ளது. இந்த சிவன் கோயில் கடந்த 2017 முதல் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோயிலின் மகத்துவம் அறிந்து வெளி மாவட்டம் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை வருகின்றனர். கோயில் அர்ச்சகர் செந்தில்குமார் கூறியதாவது; கடந்த 2017 முதல் இந்து சமய அறநிலையத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இக்கோயில் கொண்டு வரப்பட்டுள்ளது. 800 ஆண்டு பழமையான இக்கோயில் வளாகம் முழுவதும் உள்ள பாறைகளில் கோயிலின் ஸ்தல வரலாறு மற்றும் கோயிலுக்கான நிலபுலங்கள், குறித்த விவரங்கள் கல்வெட்டாக வடிக்கப்பட்டுள்ளது. மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து கல்வெட்டு துறை, ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்கள் இங்கு வந்து கோயிலை ஆய்வு செய்து கல்வெட்டு குறித்த விவரங்களை படி எடுத்துச் செல்கின்றனர். இக்கோயிலின் அதிசய நிகழ்வாக வருடத்திற்கு ஒருமுறை சிவராத்திரி அன்று காலையில் சூரிய ஒளிக்கதிர் நேரடியாக மூலவர் சிவலிங்கத்தின் மீது படும் அபூர்வ நிகழ்வு நிகழ்கிறது. அன்றைய தினம் கோயிலில் சிறப்பு பூஜைக்காக பக்தர்கள் ஏராளமானோர் வருவார்கள் என்றார். இந்து சமய அறநிலைத்துறையின் இக்கோயிலை பழமை மாறாமல் புணரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஆவண செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.