பதிவு செய்த நாள்
25
பிப்
2022
04:02
ரயில்வே பணியாளரான சேலம் வெங்கட்ராம அய்யர் காஞ்சி மஹாபெரியவரின் பக்தராக இருந்தார். அவர் மஹாபெரியவரை தரிசித்த வந்த அன்று சனிபிரதோஷமாக இருந்தது. இப்படியாக தொடர்ந்து மூன்று முறை வந்த அவர் ‘பிரதோஷத்தன்று வருவது பெரியவருக்கு தெரியுமோ தெரியாதோ’ என எண்ணியபடி வணங்கினார். அப்போது, ‘‘இன்னிக்கு என்ன பிரதோஷமா...இவர் ஒவ்வொரு பிரதோஷத்தன்று தவறாமல் காஞ்சிபுரம் வர்றார் தெரியுமோ’’ என அருகில் நின்ற தொண்டரிடம் பெரியவர் தெரிவித்தார். மஹாபெரியவரிடம் தனக்கு அங்கீகாரம் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தார் பக்தர்.
பகவான் கிருஷ்ணர், ‘என்னைச் சரணடைந்தவர்களின் தேவைகள் அனைத்தையும் பார்த்துக் கொள்வேன்’ என வாக்குறுதி அளித்தது போல் மஹாபெரியவரும், ‘‘என்னை தியானம் செய். உன் தேவைகளை பார்த்துக் கொள்கிறேன்’’ என வாக்களிப்பதை உணர்ந்தார்.
நேர்மையும், கண்டிப்பு குணமும் கொண்டவர் வெங்கட்ராமன். அதுவே அவருக்கு எதிரியாக அமைந்தது. சகஊழியர்கள் காழ்ப்புணர்வுடன் செயல்பட்டனர். யூனியன் மூலமாக இடையூறு செய்தனர். நேரடியாக எதிர்க்க முடியாமல் மேலிடத்திற்கு புகார் அனுப்பினர். உண்மையை அறிவதற்காக அவர்கள் கண்காணிப்புக் குழுவை அனுப்பினர். ஆய்வுக்குப் பின் பக்தரின் மீதான குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டதால் அங்கேயே பணியைத் தொடர்ந்தார்.
மூன்று ஆண்டுகள் முடிந்ததும் வேறு இடத்திற்கு மாற்றலாக விரும்பினார். மஹா பெரியவரிடம், ‘புதுச்சேரிக்கு இடமாறுதல் கிடைக்க அருள்புரிய வேண்டும்’ என விண்ணப்பித்தார். பெரியவரோ, ‘சென்னைக்கு போ’ என கட்டளையிட்டார். சென்னைக்கு மாறுதல் என்பது சாத்தியமில்லாத ஒன்று. அதுவும் பெரியவருக்கு நிர்வாகச் சிக்கல்கள் ஏதும் தெரியாததால் இப்படி சொல்கிறாரோ என எண்ணினார். ஆனால் பக்தருக்கோ ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது.
நீண்ட காலமாக தொடர்பில் இல்லாத உறவினர் திடீரென ஒருநாள் வீட்டுக்கு வந்தார். ‘உங்க ஜி.எம்., எனக்கு நெருங்கிய நண்பர். அவரிடம் ஏதும் விஷயம் ஆக வேண்டுமானால் சொல்லுங்கள். அவசியம் சொல்கிறேன்’ என்றார். மஹாபெரியவரின் வாக்குக்கு எவ்வளவு சக்தி... ‘சென்னைக்கு போ’ என வாக்களித்ததோடு, உறவினரை அனுப்பி விஷயம் நடக்கச் செய்ததையும் என்னவென்று விவரிப்பது?
பழம் நழுவி பாலில் விழுந்தது போல சென்னை தலைமையகத்திற்கே மாறுதல் பெற்றார். அது குறித்த தந்தியும், அனுஷ நாளில் கிடைக்கப் பெற்றார். அங்கு பணிபுரியும் போது சக ஊழியர்களால் பக்தரின் பிரதோஷ தரிசனத்திற்கு தடைகள் குறுக்கிட்டன. ‘‘இவர் அடிக்கடி விடுப்பு எடுப்பவர், உடல்நலம் இல்லாதவர் என்பதால் முன்பிருந்த இடத்திற்கே பணி மாறுதல் அளிக்கலாம்’’ என அதிகாரியின் மூலம் மேலிடத்திற்கு புகார் அனுப்பினர்.
பக்தர் மஹாபெரியவரிடம் முறையிட அவர், ‘புகார் அனுப்பிய ஆபீசர் யார்’’ எனக் கேட்டார். அதன் பின்னர் புகார் அனுப்பிய அதிகாரி பணி மாறுதல் கிடைக்கப் பெற்று வடகிழக்கு மாநிலத்திற்கு போய்விட்டார்.
வேற்று மதத்தைச் சேர்ந்த மற்றொரு அதிகாரி பணிக்கு வந்தார். அவரும் ஒருமுறை பிரதோஷத்தன்று விடுமுறை தர மறுத்தார். இன்ஸ்பெக் ஷன் செய்ய தன்னுடன் வந்தாக வேண்டும் என கட்டளையிட்டார். பக்தரால் காஞ்சிபுரத்திற்குச் செல்ல முடியவில்லை. அடுத்தமுறை பிரதோஷத்திற்குச் செல்லும் போது அங்கிருந்த தொண்டர், ‘‘ஏன் சென்ற பிரதோஷத்திற்கு வரவில்லை.. பசுமாடு கன்னுகுட்டிய தேடற மாதிரி பெரியவா எதிர்பார்த்திருந்தா’ என்று சொல்ல பக்தர் மனம் நெகிழ்ந்தார்.