பதிவு செய்த நாள்
25
பிப்
2022
04:02
‘பாரத தேசத்தை காப்பாற்ற போருக்கு தயாராக இருக்கிறேன்’ என சொல்வது போல 21 அடி உயரத்தேரின் மீது நின்று கொண்டிருக்கிறார் திருவண்ணாமலை போத்துராஜமங்கலம் போர்மன்னலிங்கேஸ்வரர். ஊரைப் போலவே மங்கலத்துடனும், பெயரைப் போலவே கம்பீரத்துடனும் நிற்கும் இவரது பிரம்மாண்டத்தையும் கண்ட கண்கள் அகல விரியும்.
மகாபாரதப் போர் நிகழவிருக்கும் காலம் அது... பாண்டவர்கள் படைபலத்தை அதிகப்படுத்த ஆயுதங்களைத் தேடி அலைந்தனர். அதற்காக கிருஷ்ணன், அர்ஜூனன், பீமன் மூவரும் தென்திசை நோக்கி சிவநந்தாபுரி என்னும் ஊருக்கு வருகின்றனர். அந்த ஊரை ஆட்சி செய்யும் போத்துலிங்கம் என்ற மன்னரிடம் ஆயுதங்கள் நிறைய இருக்கின்றன. அந்த ஆயுதங்களையும், மன்னரையும் போருக்கு பயன்படுத்த வேண்டும் என்பது அவர்களின் திட்டம். அதற்காக
கிருஷ்ணன் கிழவியாகவும், அர்ஜூனன் குமரியாகவும், பீமன் விறகு வெட்டியாகவும் வேடமிட்டுக் கிளம்பினர். பீமன் விறகுக்கட்டு ஒன்றை அரண்மனை சுவரில் வைக்க, அதன் ஒருபகுதி இடிந்தது. பீமன் சிறையில் அடைக்கப்பட்டான். அவனை விடுவிக்க வேண்டி மன்னரைக் காணச் சென்றனர். அங்கு அர்ஜூனனைக் கண்டதும் மன்னருக்கு திருமண ஆசை ஏற்பட்டது.
‘‘மன்னா நாங்கள் ஊருக்கு புதியவர்கள். எனக்கு ஒரு மகள், ஒரு மகள் உள்ளனர். என் மகனைத்தான் காவலாளிகள் கைது செய்தனர். தெரியாமல் தவறு செய்து விட்டான். மன்னியுங்கள்’’ என்றான் கிருஷ்ணன்.
‘‘சரி...அதற்கு பலனாக உன் மகளை மணமுடித்து தருவாயா’’
‘‘அப்படியே செய்கிறேன். ஆனால் உங்களிடமுள்ள ஆயுதங்கள் எனக்கு வேண்டும்’’
அர்ஜூனன் மீதுள்ள ஆசையால் மன்னரும் சம்மதித்தார்.
‘‘திருமண ஏற்பாடு தொடங்கும் முன் குளித்து விட்டு வருகிறோம்’’ என்று சொல்லி ஓட்டம் பிடித்தனர்.
மன்னரின் கோபத்தில் இருந்து தப்பிக்க ஒரு பெண்ணை உருவாக்கினார் கிருஷ்ணர். அப்போதும் கோபம் குறையாத மன்னர், மலையளவு சாதம், மாவிளக்கு கேட்டார். அதை அளித்ததும் கோபம் தணிந்தார். இதன்பின் போரிலும் பங்கேற்றார். அவருக்காக உருவான தலமே போத்துராஜா மங்கலம்.
மாசி மகம் முடிந்த மூன்றாம் நாள் தேரோட்டமும், 21வது நாள் இரவு மகா கும்ப வைபவம் நடைபெறும். அப்போது மலையளவு சாதம், மாவிளக்கு படைப்பர். குழந்தை இல்லாத பெண்கள் இதில் பங்கேற்கின்றனர்.
எப்படி செல்வது: திருவண்ணாமலை பஸ் ஸ்டாண்டில் இருந்து 15 கி.மீ.,