பதிவு செய்த நாள்
25
பிப்
2022
04:02
ராஜிராதா
தாரா என்பதற்கு ‘நட்சத்திரம்’ என்பது பொருள். வானில் இருந்து நட்சத்திரங்கள் நம்மை பார்ப்பது போல, சிம்லாவுக்கு அருகிலுள்ள தாராதேவி குன்றின் மீதிருந்து நம்மைப் பார்த்தபடி காவல்புரிகிறாள். சிம்லா மக்களின் குலதெய்வமாகவும், ஆற்றலின் அதிபதியாகவும் திகழும் இந்த தேவியைத் தரிசித்தால் மனதின் ஆற்றல் பன்மடங்கு பெருகும். பைன் மரங்கள் நிறைந்த காட்டின் நடுவே கோயில் ரம்மியமாக காட்சியளிக்கிறது.
ஒருசமயம் வங்க மன்னரான பூபேந்திர சென் இப்பகுதியில் உள்ள ஜாகர் காட்டிற்கு வேட்டையாட வந்தார். அரண்மனைக்கு திரும்பும் போது வழி தவறிச் சென்றதால் இரவில் காட்டிலேயே தங்கினார். அன்றிரவு அவரது கனவில் தாராதேவி தோன்றி தனக்கு கோயில் கட்ட வேண்டும் எனக் கூறி மறைந்தாள். மன்னரும் தாராதேவி கோயிலை நிறுவி 1766ல் வழிபாட்டுக்காக திறந்து வைத்தார். பின்னர் 1825ல் மன்னராக இருந்த பால்பீர் சென் மரத்தாலான கோயிலை அமைத்து புதிய சிலையை நிறுவினார். 2018ல் கோயில் 6 கோடி ரூபாய் செலவில் கோயில் சீரமைக்கப்பட்டது.
காளி, சரஸ்வதி, பகவதி அம்மனுக்கு சன்னதிகள் இங்குள்ளன. பைரவருக்கு தனிக்கோயில் கட்டப்பட்டுள்ளது. நவராத்திரி, துர்காஷ்டமி நாட்களில் வருடாந்திர விருந்து நடக்கும். தாராதேவியை வியாழக்கிழமையில் தரிசித்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும். தீபாவளி அமாவாசை, செவ்வாயன்று வரும் அமாவாசை சிறப்பு பூஜை நடக்கும்.
கருவறை மரத்தால் ஆன கண்ணாடி மாளிகையாக காட்சி தருகிறது. கருவறை மீது இமாசல பிரதேச பாணியில் கூம்பு வடிவ விமானம் உள்ளது. ஆபரணம், மலர் மாலைகள், வெள்ளிக்கிரீடம் அணிந்து கம்பீரமாக தேவி காட்சியளிக்கிறாள்.
கோயிலில் உள்ள கண்ணாடி ஜன்னல்கள் வழியாக பார்த்தால் பனி படர்ந்த மலைகள், பசுமை நிறைந்த காடுகளை கண்டு மகிழலாம். கோடை காலம் தரிசனத்திற்கு ஏற்றது. சிம்லாவில் இருந்து கல்காவுக்கு டாய் டிரெயின் வசதி உள்ளது.
எப்படி செல்வது
இமாசல பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் இருந்து தாராதேவி கோயில் 11கி.மீ.,
* டெல்லியில் இருந்து சிம்லாவுக்கு என்.ஹெச் 5, என்.ஹெச் 44 வழியாக 7 மணி நேர பயணம்
* சண்டிகரில் இருந்து சிம்லாவுக்கு என்.ஹெச் 5 வழியாக 3 மணி நேர பயணம்
விசேஷ நாள்:
நவராத்திரி, துர்காஷ்டமி