செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடக்க உள்ள தேர் திருவிழாவிற்காக புதிய தேர் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலின் பிரசித்தி பெற்ற மாசி திருத்தேர் திருவிழா நாளை (1 ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 2ம் தேதி காலை 9 மணிக்கு மயானக்கொள்ளையும், 5ம் தேதி மாலை 3 மணிக்கு தீமிதி விழாவும், 7 ம்தேதி மாலை 3 மணிக்கு முக்கிய விழாவான திருத்தேர் வடம் பிடித்தலும் நடக்க உள்ளது. கோவிலின் ஸ்தல புராணத்தின் படி மயான கொள்ளையின் போது பிரம்ம கபாலத்தை ஆட்கொள்ள விஸ்வரூபம் எடுக்கும் அங்காளம்மனின் கோபத்தை தனிக்க தேவர்கள் விழா எடுக்கின்றனர். விழாவில் தேவர்கள் தேரின் பாகமாக இருந்து தேர்பவனி நடத்துகின்றனர். இந்த பாரம்பரியத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் புதிதாக தேர் செய்து விழா எடுக்கின்றனர். இந்த ஆண்டு தேர் திருவிழாவிற்காக தேர் கட்டும் பணி கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது. தேர்கட்டும் பணியை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, அறங்காவலர் குழு தலைவர் வடிவேல், அறங்காவலர்கள் செந்தில்குமார், தேவராஜ், ராமலிங்கம், செல்வம், சரவணன், சந்தானம் ஆகியோர் மேற்பார்வை செய்து வருகின்றனர்.