பதிவு செய்த நாள்
03
மார்
2022
11:03
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
நரசிம்மநாயக்கன்பாளையம் ஸ்ரீராம் நகரில் விருத்தபுரீஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரியையொட்டி, ஐந்து கால பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு முதல்கால பூஜையும், இரவு, 10:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜையும், 2:00 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், அதிகாலை, 4:00 மணிக்கு நான்காம் கால பூஜையும், 6:00 மணிக்கு, ஐந்தாம் கால பூஜையும் நித்திபடி பூஜையும் நடந்தன. விழாவையொட்டி அன்னதானம் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இடிகரை அருகே உள்ள வேதநாயகி உடனமர் வில்லீஸ்வரர் திருக்கோயில் முதல் கால சிவராத்திரி சிறப்பு வழிபாடு தொடர்ந்து, லட்சிய நாட்டிய வித்யாலயா குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சி, ஓம் முருகா பஜனை குழுவினரின் பஜனை, மூன்றாம் கால சிறப்பு வழிபாடு ஆகியவை நடந்தன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கட்டளைதாரர்கள் மற்றும் சிவராத்திரி விழா குழுவினர் ஆகியோர் செய்து இருந்தனர். கவுண்டம்பாளையம் சிவா நகரில் உள்ள ஆதி மங்கல விநாயகர் திருக்கோயிலில், 12ம் ஆண்டு சிவராத்திரி விழா நடந்தது. அபிநயா நாட்டிய குழுவினரின் சிவபுராண மகத்துவம் பற்றிய பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, குழந்தைகள் தனியாக சிவபெருமான் வேடமணிந்து நாட்டிய குழுவினர் நடனம் ஆடினார். நள்ளிரவில் சிவனுக்கு பொதுமக்கள் பாலபிஷேகம் செய்து வழிபட்டனர். அதிகாலையில் சிறப்பு ஹோமம், மலர் அலங்காரம், அபிஷேக பூஜைகள் நடந்தன. இரவு முழுவதும் பக்தர்கள் கண் விழித்து இருந்து இறைவனை வழிபட்டனர். நிகழ்ச்சியில், மகளிர் குழு, பவுர்ணமி குழு, பிரதோஷ குழு உட்பட பல்வேறு குழுக்களை சேர்ந்த பெண்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி செயலாளர் குட்டி வேலுசாமி தலைமையில் நடந்தது. சின்னதடாகத்தில் உள்ள காளியம்மன் திருக்கோயிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு மகா கணபதி பூஜை தொடர்ந்து திருமாங்கல்யம் எடுத்து வருதல், சண்முகம் மடத்திலிருந்து கரகம் அழைத்து வருதல், மாவிளக்கு எடுத்து வருதல், மஞ்சள் நீர் மற்றும் மறுபூஜை ஆகியன நடந்தன.