ஹரியானாவில் குருக்ஷேத்திர மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் அபிமன்யுபூர். மகாபாரத போர் நடைபெற்ற போது இந்த கிராமத்தில் தான் அபிமன்யு சக்கர வியூகத்தில் சிக்கி இறந்தான் என நம்பப்படுகிறது. இந்திய அரசு கிருஷ்ணா சுற்றுலாத்தலங்கள் வளர்ச்சி திட்டம் என்ற ஒன்றை உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக குருக்ஷேத்திர முன்னேற்ற வாரியம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அது அபிமன்யுபூர் கிராமத்தின் சாலைகளை விரிவுபடுத்தவும், அபிமன்யு பூங்கா ஒன்றை உருவாக்கவும் தீர்மானித்தது. இந்தப் பகுதியில் ஒரு கோட்டை இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதை சக்கர வியூகம் அல்லது அபிமன்யுவின் கோட்டை என்கிறார்கள். 2020ல் பதினெட்டு அடி உயரமுள்ள அபிமன்யுவின் சிலை இங்கு வைக்கப்பட்டது. தன் தலைக்கு மேல் இரு கைகளாலும் ஒரு தேர்ச் சக்கரத்தை சுமந்திருப்பது போல் இது காட்சியளிக்கிறது. அபிமன்யு பூங்காவில் சக்கர வியூக அமைப்பு உருவாக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.