கொடுங்கோல் அரசர் ஆசையாக பருந்து ஒன்றை வளர்த்து வந்தார். பருந்தும் அவர் மீது உயிரையே வைத்திருந்தது. தான் எங்கு சென்றாலும் கூடவே பருந்தையும் அழைத்துச் செல்வார். இப்படி ராஜபோக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தது பருந்து. ஒருநாள் அரசர் தான் வளர்த்து வரும் பருந்துடன் வேட்டைக்கு சென்றார். அப்போது அவருக்கு தாகம் எடுத்தது. அப்போது பாறை ஒன்றில் நீர் வழிவதை பார்த்ததும், தன்னிடம் இருந்த குவளையில் பிடிக்க சென்றார். பருந்து குவளையை தட்டி விட்டது. ‘என்னடா... இது கைக்கு எட்டியது இப்படி வாய்க்கு எட்டாமல் போய் விட்டதே’ என வருத்தப்பட்டார். இருந்தாலும் பருந்தின் தலையை அன்பாக தொட்டார். ஏதோ தெரியாமல் செய்துவிட்டது என அதன்மீது பரிதாபப்பட்டார். பின் மீண்டும் தண்ணீரை தட்டிவிட்டது. இதனால் கோபம் அடைந்து அதன் தலையை வெட்டினார். ஒருவிதத்தில் கோபம் அடங்கினாலும் தாகம் அடங்கவில்லை. அப்போது திடீரென நீர் வருவது நின்றது. ‘தண்ணீர் ஏன் நின்றது’ என பார்ப்பதற்காக பாறையின் மீது ஏறினார். தண்ணீர் தேங்கிய இடத்தில் கருநாகம் இறந்து கிடந்தது. அப்போதுதான் அவர் உண்மையை உணர்ந்தார். ‘என் உயிரை காப்பற்றிய பருந்தை கொன்று விட்டேனே’ என அழுதார். பருந்தின் தியாகத்தை போற்றும் வகையில் அரண்மனையில் தங்கத்திலான பருந்து சிலையை வைத்து, அதன் சிறகில் வாசகங்களை எழுதினார். 1. கோபத்தில் செய்யக்கூடிய எந்த செயலும் துன்பத்தையே தரும். 2. உன் மீது அன்பானவர்கள் பிடிக்காத செயல்களை செய்தாலும், உனது நன்மைக்காகவே செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள். பார்த்தீர்களா... இதுபோல் நமக்கும் அன்றாட வாழ்க்கையில் பல நிகழ்ச்சிகள் நடந்திருக்கும். பெற்றோர், நண்பர்கள் என பலரும் நமக்கு பிடிக்காததை செய்திருப்பர். அதற்காக அவர்கள் மீது நாம் கோபப்படவும் செய்திருப்போம். இனியாவது அவர்கள் எதற்காக இப்படி செய்கிறார்கள் என்பதை ஆராய்ந்துதான் பாருங்களேன். அன்பை மறக்க வைப்பது கோபம். கோபத்தை மறக்க வைப்பது அன்பு. இதில் எது வேண்டும் உங்களுக்கு...