பதிவு செய்த நாள்
04
மார்
2022
04:03
நாகர்கோவில்: அய்யா வைகுண்டரின் 190–வது அவதார தினத்தையொட்டி சுவாமி தோப்புக்கு பக்தர்கள் பேரணியாக சென்றனர். அய்யா வைகுண்டரின் தலைமை பதி சுவாமிதோப்பில் அமைந்துள்ளது.
அவரது அவதார தின விழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்காக திருச்செந்துார், திருவனந்தபுரம் மற்றும் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் காவிக்கொடி ஏந்தி ‘அய்யா சிவசிவ ஹரஹரா’ என்று உச்சரித்த படி நாகர்கோவில் நாகராஜாகோயில் திடலில் நேற்று இரவு வந்து சேர்ந்தனர். இங்கு சமய மாநாடு நடைபெற்றது. இன்று அதிகாலை இங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அய்யா வாகனத்துடன் பேரணி புறப்பட்டது. கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், பொத்தையடி வழியாக சுவாமி தோப்பில் பவனி வந்தடைந்தது. பவனியில் சிறுமிகளின் கோலாட்டம், மேளதாளம் போன்றவை இடம் பெற்றிருந்தது. ஏராளமானோர் சந்தனகுடம் எடுத்து வந்தனர். வழிநெடுகிலும் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உச்சிப்படிப்பு, உகபடிப்பு, பணிவிடை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.