உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே வைகை கிராமத்தில் பழமை வாய்ந்த சுடலை மாடன்சாமி கோயில் உள்ளது. சிவராத்திரி நிறைவுபெற்று 8 நாள் கழித்து நடக்கக்கூடிய மாசி களரி விழாவில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது.
கடந்த மார்ச் 2 (புதன்கிழமை) கோயில் வளாகத்தில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஆட்டு கிடா பலியிடப்பட்டு கூழ் மற்றும் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. இரவில் பத்திரகாளி அம்மன் கோயிலுக்குச் சென்று குறிசொல்லும் நிகழ்ச்சிக்காக சுடலைமாட சாமி வேடமணிந்த பூசாரிகள் மேளதாளங்களுடன் புறப்பட்டுச் சென்றனர். குறிப்பிட்ட தொலைவு சென்ற பிறகு ஊர் எல்லையில் உள்ள மயான பகுதிக்குச் சென்று அங்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு திருமஞ்சனத்துடன் காப்பு கலையும் நிகழ்ச்சி நடந்தது. பூஜைகளை மாடசாமி ரவீந்திரன், முருகேசன், செல்வராஜ், கார்த்திக், மோகன் குமார், குலதெய்வ கோயில் விழா கமிட்டியினர் செய்து இருந்தனர். ஏராளமான சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்றனர்.