பதிவு செய்த நாள்
12
மார்
2022
01:03
பேரையூர்: சிலைகள் ஆடர்கள் தொடர்ச்சியாக வருவதால் சிலை தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பேரையூர் அருகே சிலமலைப்பட்டியில் சிலைகள் தயாரிப்பதால் சிலைமலைப்பட்டி என்று பெயர் வந்தது. இங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சிலை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வந்தனர். போதிய வருவாய் இன்மையால் இத்தொழில் பலர் மாற்றுத்தொழிலுக்கு சென்றுவிட்டனர். தற்போது 10 குடும்பங்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். இங்கு கோபுர கலசம், கொடிமரம், திருவாச்சி, கவசம், பூஜை மணிகள், ஐம்பொன் சிலைகள் தயாரிக்கப்பட்டு விருதுநகர், தேனி, ராமநாதபுரம்,சிவகங்கை, திருநெல்வேலி உட்பட தமிழகத்திலுள்ள பெரும்பாலான மாவட்டங்களுக்கு அனுப்புகின்றனர். சிலைமலைபட்டியைச் சேர்ந்த முனியாண்டி கூறியதாவது. பரம்பரை தொழில் இதை நாங்கள் தொடர்ச்சியாக செய்து வருகிறோம். செம்பு, வெள்ளி,
பித்தளை தகடுகளிலிருந்து கோபுர கலசம், கொடிமரம், சாமிகள் பின்புறம் வைக்கவேண்டிய திருவாச்சி, கவசம், பூஜை மணிகள் மிக நுணுக்கமாக கலைநயத்துடன் செய்ய நாட்கணக்கில் ஆகிறது. போதிய லாபம் இல்லை என்றாலும் மனதிருப்திகாக இத்தொழிலை செய்து வருகிறோம் என்றார்.