பதிவு செய்த நாள்
12
மார்
2022
01:03
கருமத்தம்பட்டி: கணியூரில் உள்ள ஐந்து கோவில்களில், நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் கிராமத்தில், விநாயகர், முருகன், மாரியம்மன், மாகாளியம்மன் மற்றும் கொங்கலம்மன் கோவில் பழமையானவை. தனித்தனி இருந்த இக்கோவில்கள், அவிநாசி ரோடு விரிவாக்கத்தின் போது, இடமாற்றம் செய்யப்பட்டு, ஒரே இடத்தில் வைத்து வழிபாடுகள் நடந்து வந்தன.
இங்கு கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடந்து வந்தன. பணிகள் முடிந்து, நேற்று கும்பாபிஷேக விழா துவங்கியது. காலை, 7:00 மணிக்கு, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் நடந்தது. தொடர்ந்து காப்பு கட்டுதல், வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. முதற்கால ஹோமம் மற்றும் பூர்ணாகுதி நடந்தது. நான்கு கால ஹோமங்கள் முடிந்து, நாளை காலை, 7:00 மணிக்கு கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. 8:00 மணிக்கு, அனைத்து மூலவர்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள், விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.