பதிவு செய்த நாள்
15
மார்
2022
03:03
மேட்டுப்பாளையம்: இலுப்பநத்தத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
சிறுமுகை அருகே இலுப்பநத்தத்தில், 12 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலை இலுப்பநத்தம், வையாளிபாளையம், திம்மனூர் ஆகிய ஊர் பொதுமக்கள் புதுப்பித்து திருப்பணிகள் செய்தனர். கும்பாபிஷேகம் விழா, 12 ம் தேதி துவங்கியது. தொடர்ந்து முளைப்பாரி எடுத்தல், அங்குரார்ப்பணம், கலச ஸ்தாபனம் ஆகியவை நடந்தது. இரவு, 9:00 மணிவரை, பிரம்மசக்தி, அலங்கார திருமஞ்சனம், மாற்றுமுறை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தன. பின்பு மூலவர் விமான கலச ஸ்தாபனம், ஆஞ்சநேயர் விமான கலச ஸ்தாபனம், ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வரதராஜ பெருமாள் உற்சவர் பிரதிஷ்டை செய்தனர். 13 ம் தேதி ஹோமம் திவ்ய பிரபந்த சேவா காலம், வேதபாராயணம் உபசாரங்கள், பூர்ணாகுதி, நாடி சந்தானம், யாத்ரா தரிசனம் ஆகியவை நடந்தன. பின்பு பெருமாள், தாயார், கருடாழ்வார், ஆஞ்சநேயர் ஆகிய கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்பு அலங்காரம், திருவாராதனம், சாற்றுமுறை. தீர்த்த பிரசாதம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. காரமடை வேத வியாச சுதர்சன பட்டர் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. ரேயான் நகர் வெங்கடாசலம், சிறுமுகை ராமகிருஷ்ணன் ஆகியோர் பக்தி சொற்பொழிவு ஆற்றினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.