வாழ்வில் இன்ப துன்பம் என்னும் இருவேறு சூழ்நிலைகளைச் சந்தித்துத் தான் ஆகவேண்டும். மனம் ஒருபோதும் தடுமாறக் கூடாது. மனம், மொழி, மெய் ஆகிய மூன்றாலும் நல்லதையே சிந்திக்க வேண்டும். அதற்கான நல்லறிவைத் தரும் ஞானபண்டிதனான முருகன் பழநியில் இருக்கிறார். பகைவனுக்கு அருளும் கருணை உள்ளம் கொண்டவர் அவர். அம்மையப்பர் மீது கோபம் கொண்டு ஆண்டியானதாகச் சொன்னாலும் அதற்குரிய தத்துவம் சிறப்பானது. அவர் தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளாமல் தன்னை நாடி வருபவருக்கு அருளை வாரி வழங்கவே ஆண்டிக்கோலத்தில் இருக்கிறார். அதனால் தான் பழநி சென்று வழிபடுபவர்கள் செல்வவளம் மிக்கவர்கள் ஆகிறார்கள். பங்குனி உத்திர நன்னாளில் தண்டாயுதபாணியைச் சரணடைந்து செல்வமும், கந்த லோகத்தில் வாழும் பாக்கியமும் பெறுவோம்.