திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) முத்துக் கொண்டை சாற்றி, அதில் சிறிய நெற்றி சுட்டித் தொங்கல் அணிந்து பக்தர்களுக்கு காட்சியாளி்ததார். பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றி வணங்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் ஆலயத்தின் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி எனப்படும் பரமபத வாசல் திறப்பு விழா வருடம் தோறும் 21 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். முதல் நாள் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி, அடுத்த பத்து நாட்கள் பகல் பத்து என்றும், அதற்கு அடுத்த பத்து நாட்கள் இராப்பத்து எனவும் உற்சவம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு வைகுண்ட ஏகாதேசி பெருவிழா கடந்த 19ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. அதற்கு அடுத்து பகல் பத்து உற்சவம் கடந்த 20 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது,
திருவாய்மொழி திருநாட்கள் எனப்படும் பகல்பத்து திருநாளின் ஏழாம் நாளான இன்று காலை நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் பெரிய திருமொழி திருவாலி திவ்ய தேச பாசுரம் செவிமடுக்க, ஆண்டாள் (கிருஷ்ணன்) முத்துக் கொண்டை சாற்றி, அதில் சிறிய நெற்றி சுட்டித் தொங்கல் அணிந்து, வைரக்கல் அபய ஹஸ்தம் சாற்றி, திருமார்பில் இருபுறமும் முதன்முறையாக மகர கர்ண பத்ரங்கங்களை நேர்த்தியாக அணிந்து; மகரி ; ஸ்ரீ மகாலட்சுமி பதக்கம் நடுவில் சாற்றி; சிகப்பு கல் வைத்த வெள்ளை பூ பதக்கம் அணிந்து; வரிசையாக வைரக்கல் மகர கண்டிகைகள் திருமேனி நிறைந்து சாற்றி ; தங்கப் பூண் பவழ மாலை; 2 வட முத்து மாலை அணிந்து, பின் சேவையாக - நீல கல் வைத்த வெள்ளை பக்க்ஷி பதக்கம் - புஜ கீர்த்தி ; மற்றும் தாயத்து சரங்கள் அணிந்து சேவை சாத்தித்தார். பக்தர்கள் ரெங்கா ரெங்கா என பக்தி பரவசத்துடன் வணங்கி வழிபட்டு வருகின்றனர்.