முருகன் தெய்வானையை திருமணம் செய்த தலம் திருப்பரங்குன்றம். இங்குள்ள ஆஸ்தான மண்டபத்தில் தெய்வானை முருகன் மணக்கோலம் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. அதனடியில் நாயக்கர் கால கல்வெட்டு உள்ளது. அதில் ‘தெய்வானை நாச்சியார் கல்யாணம்’ என குறிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் 48 துாண்கள் உள்ளன. இதில் 40 அடி உயரமும், நான்கு அடி உயரம் மற்றும் அகலம் கொண்ட ஒரு துாணில் தான் முருகன், தெய்வானை திருமணக் காட்சி உள்ளது. இதில் இந்திரன் தன் வலக்கையால் கெண்டியில் இருந்து தாரை வார்த்து தெய்வானையை முருகனுக்கு கன்னிகாதானம் செய்கிறார். தெய்வானை மலர் ஏந்தியும், இந்திரன் வஜ்ராயுதம் தாங்கியும் நிற்கின்றனர். இந்த மண்டபத்தில் விநாயகர், துர்க்கை, பார்வதி, பரமசிவன், பெருமாள், மகாலட்சுமி, மன்னன் கூன் பாண்டியன், அதிகார நந்தி, திருஞான சம்பந்தர், குலச்சிறை நாயனார், மங்கையர்கரசியார் ஆகியோருக்கும் சிலைகள் உள்ளன.