திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவில் உண்டியல் வருவாய் ஒரே நாளில், 5 கோடி ரூபாயை கடந்து உள்ளது.
கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால், திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரிக்கத் துவங்கி உள்ளது.தற்போது திருப்பதியில் உள்ள கோவிந்தராஜஸ்வாமி சத்திரம், சீனிவாசம், பூதேவி காம்பளக்ஸ் உள்ளிட்ட இடங்களில் தினசரி, 30 ஆயிரம் சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், விரைவு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையும், 28 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதை தொடர்ந்து ஏழுமலையான் தரிசனத்திற்காக பக்தர்கள் படையெடுக்கத் துவங்கி உள்ளனர். நேற்று முன்தினம், 80 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். மேலும் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய வருமானத்கை கணக்கிட்டதில், ஒரே நாளில், 5.13 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.இரண்டு ஆண்டுகளுக்குப் பின் திருமலையில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கத் துவங்கி உள்ளதை அடுத்து, தேவஸ்தான அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.