பதிவு செய்த நாள்
21
மார்
2022
10:03
நத்தம்:நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி பெருந்திருவிழா நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது.
தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற நத்தம் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடந்து வருகிறது. முன்னதாக மார்ச் 7 கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் அழைத்து வருதல், காப்பு கட்டுதல், மார்ச் 11 மயில் வாகனத்தில் அம்மன் பவனி, தேர் சட்டம் போடுதல், மார்ச் 15 சிம்ம வாகனத்தில் மின் விளக்கு அலங்காரத்தில் அம்மன் பவனி, பூக்குழி கண் திறத்தல், மார்ச் 18 மின் விளக்கு அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் அம்மன் பவனி வருதல், உள்ளிட்ட திருவிழா நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று காலை 7 மணிக்கு பக்தர்கள் மாரியம்மனுக்கு மஞ்சள் பாவாடை கொண்டுவருதல், மாலை 3 மணிக்கு அரண்மனை பொங்கல், மாவிளக்கு வைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து நாளை மார்ச் 22 திருவிழாவின் முக்கிய நிகழ்வான அதிகாலை 5 மணி முதல் 12 மணி வரை அக்னிச்சட்டி எடுத்தல், காந்திநகர் பொதுமக்களால் கழுகு மரம் கூன்றி, காமராஜ் நகர் பொதுமக்களால் கழுகு மரம் ஏறுதல் நடைபெறும். பிற்பகல் பூக்குழி இறங்குதல், இரவு கம்பம் அம்மன் குளம் விடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக மார்ச் 23 காலை 6:00 மணிக்கு மாரியம்மன் மஞ்சள் நீராடி, பூப்பல்லக்கில் நகர்வலமாக வந்து மார்ச் 24 4:30 மணிக்கு கோவில் சேருதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.